செவ்வாய், அக்டோபர் 02, 2012

நதி எங்கே போகிறது...


உலகத்தில் மனிதனால் உருவாக்கமுடியாத பலவற்றுள் நதியும் ஒன்று. நதி பூமியை குளிர்விக்க, எல்லா உயிரினமும் ஜனிக்க, அனுபவிக்க, தாகம் தீர்க்க, நீந்தி மகிழ, பார்த்து ரசிக்கவென்று படைக்கப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு. பிரபஞ்சமே ஒரு அழகான ரகசியம் அந்த ரகசியத்தின் மெய்பொருள் இந்த நதிகள். நதி தன்னை காயப்படுத்துபவர்களையும் குளிர்விக்கிறது. தன்னை மாசுபடுதுபவர்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான் முன்னோர்கள் தாய்மைக்கு இலக்கணமான நதிகளுக்கு கங்கா, யமுனா, காவேரி என்று பெயரிட்டு பெண்ணும் நதியும் ஒன்றாக கருதினர். ஒரு பெண் கெட்டுப்போனால் அந்த குடும்பம் கெட்டுப்போகும் அதேபோல்  ஒரு நதி கெட்டுப்போனால் அது அந்த நதியை சார்ந்த அத்தனையும் கெட்டுப்போகும் என்கின்ற மனநிலையோடு வைக்கப்பட்ட பெயர்களாக பெண்ணின் பெயரை நதிக்கு வைத்தனர் முன்னோர்கள். 
எங்கெல்லாம் நதிகள் ஓடுகின்றனவோ அங்கெல்லாம் பூக்கள் சொரிந்து நந்தவனமாகுகின்றன. நதி மனிதருக்கு ஒரு வரப்பிரசாதம். நதி கடவுளுக்கு இணையான ஒன்று. நதி தனக்கான கடமையை சரியாக செய்து வாய்க்கால்  வரப்பாக, மலைமேல் அருவியாக ஓடி கடலில் கலப்பதுவரை நதி ஒரு நடமாடும் தேவதையாக, கண்களுக்கு விருந்தாக, உடலுக்கு இனிமையாக, தாகத்தை தணிக்கும் தாயாக, பசிக்கு மீன்களை உணவாக தந்து நம்மை வளர்த்தெடுப்பதில் நதிக்கு முக்கிய பங்குண்டு. நதிக்கும் நமக்குமான தொடர்பு எக்காலத்திலும் இருந்துகொண்டே இருப்பவை. நதி வற்றிப்போனால் அது நமக்கு தரப்பட்ட தண்டனை.

நதிக்கு இவ்வளவு சிறப்பு இருக்க, நாம் நதியை எப்படி வைத்திருக்கிறோம். நமது நாட்டில் உள்ள நதிகள் செத்து ரொம்ப நாளாகிவிட்டது. அந்த நதிக்குதான் நாம் காகிதங்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும், தண்ணீர் பாட்டில்களாலும், நமது மனித மலங்களாலும், ரசாயன குழம்புகளாலும் இப்போது சமாதி கட்டிக்கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட நமது இந்திய நாட்டில் உள்ள எல்ல நதிகளும் கொலை செய்யப்பட்டு சடலங்கலாக்கப்பட்டுவிட்டன. அந்த செத்த நதிகளில்தான் இன்னும் நாம் உறவு வைத்துக்கொண்டிருக்கிறோம். புனிதமான கங்கை நதி எப்போதோ செத்துப்போய்விட்டது. அதை புனிதம் என்று நம் கழிவுகளை கொட்டிக்கொட்டி நாசமாகிகொண்டே இருக்கிறோம்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் ஐம்பூதங்களால் ஆனவை நீர்,நிலம்,காற்று, ஆகாயம், பூமி இதைதான் கடவுள் என்று நாம் உருவங்களாக்கி வெவ்வேறு ரூபத்தில் நாம் வழிபடுகிறோம். அதை கருத்தில் கொண்டு மண்ணால் ஆனா உருவத்தை கடவுள் என்று நினைத்து நீரில் கரைக்கப்பட்டு வந்த வழிபாடுதான் விநாயகர் சதுர்த்தி இதை புரியாமல் ரசாயன கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை சாயம் பூசி அதை ஆற்றிலும், கடலிலும் கரைத்து நதியை நாசம் செய்வதை விநாயகரே ஏற்கமாட்டார்.நதியை மாசாக்கும் சடங்கு அது சடங்கே அல்ல அது நதிகளுக்கு கட்டப்படும் சமாதி. அதனால் கடவுள் ஒருபோதும் திருப்தியடையப்போவதில்லை. நாம் கடவுள் பெயரால் நதியை கொலை செய்கிறோம் என்பதே உண்மை.
இதுவரை நதிகளை கொலைசெய்தது போதும், நதிக்கு நாம் செய்யும் ஒவ்வரு கெடுதலும் நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்குளியாகும். இனியாவது இருக்கும் நதியை காப்பாற்றினால் மட்டுமே அடுத்த தலைமுறை வாழ வழியுண்டாகும். நாம் சேர்த்து வைக்கும் பல கோடி சொத்துக்கள் நமது அடுத்த தலைமுறைக்கு உதவுகிறதோ இல்லையோ அவர்களுக்கு நாம் விட்டுச்செல்லும் சுத்தமான காற்று, நீர்தான் அவர்களை ஆரோக்கியமாக வைத்து வாழவகைசெய்யும். இயற்கையை அழிப்பதும் பெற்ற தாயை அழிப்பதும் ஒன்றுதான். ஆகையால் இயற்கையை நாம் காப்பாற்ற வேண்டாம் அழிக்காமல் இருப்போம் என்பதே என்னுடைய கருத்தாகும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக