புதன், மார்ச் 28, 2012

நட்பு...

               
              "நட்பு" இந்த மூன்றேழுது மந்திரசொல் இல்லாவிட்டால் அந்த மனிதன் ஒரு மனநோய் உள்ளவனாகிவிடுவான். நட்பு ஒரு மனிதனை அவன் அறியாமலேயே பல மாற்றங்களை அவனுக்குள் நிகழ்த்திவிடுகிறது.
 காதலிக்காமல் கூட   ஒருவன் இருந்துவிடலாம் ஆனால் நட்பில்லாமல் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. நாம் யாரை
நம்புகிரோமோ,இல்லையோ நண்பனை கண்டிப்பாக நம்புவோம். நல்ல நட்ப்பை நாம் உயிரைக் குடுத்தாவது பெறவேண்டும்.ஆண்,பெண், நிறபேதம், உயர்வு,தாழ்வு என்று எதுவும் பார்துவருவதல்ல நட்பு என்பது. நட்பு என்பது மனம் சம்பந்தப்பட்ட விசயமே தவிர பணம் சம்பந்தப்பட்டதாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ஒரு நல்ல நண்பன் நம்மிடம் இருந்தால் ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்கு சமமாகும். நல்ல நட்பு என்பது எதையும் எதிர்பார்த்து வருவதல்ல அது இயல்பாக வருவது. 


    காலம் எத்தனைதான் கடந்தாலும் நமக்குள் குதுகலத்தை ஏற்படுத்துவது
 நம்முடைய நட்பைவிட வேறெதுவுமில்லை. நமக்கு ஏற்படும் எல்லா சந்தோசங்களையும், துக்கங்களையும் சொல்லும்போது அதை ஏதோ முதல் முறை கேட்பது போல் ஆர்வமாய் கேட்பது நண்பனை தவிர வேறு யாராக இருக்க முடியும். நட்பு சிரிக்க வைக்கும், தவறு செய்யும்போது சிந்திக்க வைக்கும். நண்பன்கூட இருக்கும்போது எத்தகைய கவலையும் நெருங்காது
காக்கும் கவசமாக இருப்பது நட்பே ஆகும்.

எந்த பிரச்சனைக்கும் முன்னால் வந்து நம்மை காப்பது நண்பா் மட்டுமே. நல்ல நட்பு வாழ்க்கை முழுவதும் தொடருமானால் அந்த நட்பினால் நாம் நமது வாழ்கையில் ஒருபடி முன்னேறியிருப்போம் என்பதே உண்மை. நல்ல நட்பு  பல தீய விசயங்களிலிருந்து  நம்மை காக்கும் ஒரு கவசம். ஒரு பெண்ணை காதலித்தாலும், காதலில் தோல்வி என்றாலும் முதலில் நாம் பகிர்ந்துகொள்வது நம்முடைய நண்பர்களிடம்தான்.
நல்ல நட்பு  என்பது நம் வாழ்கையின்  சிறந்த விருது. நல்ல நட்பு நமது வாழ்கையை சுவையூட்டவந்த  வந்த  விருந்து. நமது கவலையை போக்க வந்த மருந்து. ஆகையால் நண்பர்களே! நல்ல நட்புக்கு தலைவணங்குவோம்.  

ஞாயிறு, மார்ச் 25, 2012

SHADOW OF A DOUBT - பழைய ஆங்கிலப்படம் புதிய பார்வையில்...


                      அல்பிரேட் ஹிட்ச்காக்கின் ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் படம் " SHADOW OF A DOUBT". தெரேச வ்ரிக்ஹ்ட் இத்த படத்தில் மிக நல்ல நடிப்பை காட்டியிருக்கிறார். ஒரு சாதாரண கதையை  சஸ்பென்ஸ் நிறைந்ததாக மாறும்போது படம் நமக்கு ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஜோசப் காட்டேன் ஒரு சிறந்த வில்லத்தனத்தை நடிப்பில் நிரூபித்திருக்கிறார். உலகப்படம் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு அழகான குடும்பம் அந்த குடும்பத்தலைவியின் தம்பிதான் வில்லன் ஜோசப் காட்டன். அந்த குடும்பத்தின்  மூத்த மகள்தான்  தெரேச வ்ரிக்ஹ்ட். தனது தாய்மாமா வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்ம ஊர் கிராமத்து கதாநாயகியைபோல் அங்கேயும் கதாநயாகி தனது தாய்மாமன்   ஜோசப் கட்டனை எதிர்பார்த்து காத்திருக்கிறார். வருவது அவரது தாய்மாமா என்றாலும் அந்த தாய்மாமா மூன்று கணவனை இழந்த பணக்கார  விதவை பெண்களை கொலைசெய்துவிட்டு  பணத்தை அபகரித்து வந்தவர்  என்று தெரியாமல் அந்த குடும்பம் மகிழ்ச்சியோடு அவரை ரயில் நிலையத்தில் வரவேற்கிறது.
நீண்ட நாள் பிரிந்திருந்த தனது தம்பியை தெரேசாவின் தாய் கண்ணீரோடு வரவேற்கிறார். அப்போது ஜோசேப் தனது அக்கா குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு தனது மச்சானுக்கும் ஒரு ரிஸ்ட் வாட்சை பரிசளிக்கிறார். இதை பார்த்த தெரேச உணர்ச்சிவசப்பட்டு உள்ளே போகிறார். அதை தொடர்ந்து ஜோசேப் தனது அக்கா மகளுக்கு தான் கொள்ளையடித்த வைர மோதிரத்தை பரிசளித்து மகிழ்விக்கிறார்.

தெரேச அந்த பரிசை ஏற்றுக்கொண்டு தனது தாய்மாமன் மீது காதல் கொள்கிறார். தெரேச தனது காதலை மறைமுகமாக சொல்கிறார். அப்போது அந்த மோதிரத்தை பார்க்கிறார். அதில் வேறு யாரோ ஒருவரது பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் பதிக்கப்படிருப்பதை பார்க்கிறார்.


அப்போதே அவருக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அது நகை கடையின் பெயர் என்று சொல்லி சமாளிக்கிறார் வில்லன். தெரசாவின் அப்பா ஒரு வங்கி அதிகாரி, அவரும் அவர் நண்பரும் எப்போதும் கொலை பற்றி பொழுதுபோக்கிற்காக  பேசுவார்கள். அப்போது ஜோசேப் செய்த கொலை பற்றி நியூஸ் பேபரில் வந்ததை பார்த்து அதை குடும்பத்தில் உள்ளவர்கள் படித்துவிடாமல்  அதை கிழித்து தனது பக்கெட்டுக்குள் மறைப்பதை தெரேசா பார்த்துவிடுகிறார். அப்போதுதான் அவருக்கு தனது தாய்மாமன் மீது  சந்தேகம் ஏற்படுகிறது.  


ஜோஷேபை தேடி இரண்டு காவல் துறை அதிகாரி வீட்டில் உள்ளவர்களை கணக்கெடுப்பது போல் வந்து விசாரிகிறார்கள். அதில் ஒருவர் தெரசாவை தனிமையில் சந்திக்க விரும்புவதாகவும் மறுநாள் மாலை ஒரு உணவு விடுதுக்கு வரும்படி சொல்லிவிட்டு செல்கிறார்கள். அவர் ஒரு காவல் அதிகாரி என்று தெரியாமல் தெரேசா அவரை மறுநாள் சந்திகிறார்  ஆப்போது அவர் தெரேசாவின் தாய்மாமா பற்றிய உண்மையை சொல்லி தான் ஒரு போலீஸ் அதிகாரி எனவும் ஒப்புக்கொள்கிறார். இதை நம்ப  முடியாமல்  மறுக்கும் தெரேசா அதை கண்டுபிடிக்க லைப்ரரி சென்று தனது தாய்மாமன் ஜோசேப் மறைத்த அந்த செய்தித்தாளை எடுத்து பார்ப்கிறார் அதில் அவரது  தாய்மாமா செய்த கொளைபற்றியும் அந்த கொலைகாரனை விரைவில் பிடித்து விடுவோம் என்று காவல்துறை அறிவித்ததை பற்றியும்  படித்து அதிர்ச்சி அடையும் தெரேசா அந்த நிமிஷம் முதல் தனது தாய்மாமனை வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார். மறுநாள்  அந்த காவல்துறை  அதிகாரியை சந்தித்து தான் தனது தாய்மாமன் பற்றிய விஷயங்களை ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டு அந்த அதிர்ச்சியோடு வீடு திரும்புவார்.
தான் விரும்பிய தனது  தாய்மாமன் நல்லவர் இல்லை என்று தெரிந்து வருத்தப்படும் தெரேசா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுவதும் பிறகு தனது தாய்மாமனை வெறுப்பது ஜோஷேபிட்கு சந்தேகத்தை  ஏற்படுகிறது. தனது தாய் தனது தாய்மாமன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தனது தாய்மாமனை வீட்டை விட்டு விரைவில் போக சொல்லி வற்புறுத்துகிறார். தன்னை பற்றி தெரேசா முழுவதும் அறிந்துகொன்டத்தை அறிந்து தெரேசாவை கொலை செய்ய முயற்சிக்கிறார் ஜோசேப். அதில் இருந்து மீண்ட தெரேசா அந்த காவல்துறை  அதிகாரியை காதலிக்கிறார். இது மேலும் வெறுப்பை ஜோசெபிட்கு ஏற்படுத்துகிறது. மீண்டும் ஒரு கொலைமுயற்சி அதிலும் தெரேசா தப்பிக்கிறார். இறுதியாக தான் ஊரை விட்டு செல்வதாக குடும்பத்திடம் அறிவிக்கிறார் ஜோசேப் இதை கேட்டு உள்ளுர மகிழ்கிறார் தெரேசா. 

தனது அக்கா குடும்பதிடம் விடைபெற்றுக்கொண்டு ஜோசெப் ரயில் வண்டியில் ஏறுகிறார் அப்போது வழியனுப்ப வந்த தெரசாவை அழைத்து பேச வேண்டும் என்று சொல்லி அவரை உள்ளே அலைகிறார். யாரும் இல்லாத அந்த ரயில் பெட்டிக்குள் தனது ரகசியம் அறிந்த தெரசாவை ரயில் கிளம்பியதும் போகவிடாமல் தடுத்து அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலைசெய்ய முயற்சிக்கிறார் ஜோசேப். அப்போது சுதாகரித்துக்கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தெரேசா தனது தாய்மாமன்  ஜோஷேப்பை ரயிலில் இருந்து தள்ளி விடுகிறார். படம் அதோடு முடிகிறது. ஒரு சஸ்பென்ஸ் கதையை சுவாரசியம் குறையாமல் தந்த அல்பிரேட் ஹிட்ச்காக்கின் இயக்கம் பாராட்டுக்குரியது.


சனி, மார்ச் 24, 2012

ராஜபக்சே அரசே இனியாவது தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்...



இலங்கை தமிழ் மக்களை மண்ணோடு மக்க செய்த ராஜபக்சே நீ ஒன்றும் ஆயிரம் வருடம் வாழ்த்துவிடப்போவதில்லை அப்படி நீ வாழ்வாயேல் அது உனக்கு மரணத்தைவிட வலி மிகுந்ததாய் இருக்கும். நீ தமிழ் இனத்திற்கு செய்த துரோகம் கண்டிப்பாய் உன்னையும் உன்னை சேர்ந்தவர்களையும் அழிக்கும். இலங்கை மீதான போர் குற்றத்திற்கு இந்தியா, அமேரிக்கா உட்பட 24  நாடுகள் கையப்பமிட்டுள்ளன. ராஜபக்சே இந்தியா ஒருபோதும் உன்னுடைய அக்கிரமதிட்கு துணை நிற்காது சீனா உன்னுடன் இருக்கும் தைரியத்தில்தானே இந்தியாவை குறைத்து மதிப்பிடுகிறாய். நீ கண் மூடிக்கொண்டதால் உலகம் இருண்டுவிடப்போவதில்லை. நீ உன் கையால் சூரியனை மறைத்துவிட்டு சூரியணே இல்லை என்று சொன்னால் அது உண்மையாகிவிடாது. அதே போலதான் இலங்கை மீது தவறு இல்லை என்று கூறும் உங்கள் வாக்கும், நாக்கும் அழுகிப்போகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராஜபக்சே! உனக்கு மன்னிப்பே கிடையாது நீ சொல்லவேண்டிய பதில்கள் நிறையவே இருக்கிறது.  ராஜபக்சே! நீயும் ஹிட்லரும் ஒன்றுதான் மக்களை காரணமில்லாமல் அழிக்கும் ராக்ஸசன் நீ. நீ ஒரு இரண்டாம் ஹிட்லர் உன்னால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீ பதில் சொல்லியே தீரவேண்டும்.

உனக்கு இறக்கமென்பதே  கிடையாதா? நீ என்ன சாத்தான் பெற்ற பிள்ளையா? உனக்கு கருணை கொஞ்சமும் கிடையாதா? நீ பிறக்கும்போது உனது இதயத்தை புதைத்துவிட்டு பிறந்தாயா? ஒரு பாவமும் அறியாத மக்களை, குழந்தைகளை நிருவானப்படுத்தி  கொன்றாயே  உனக்குமட்டும் ஆடை எதற்கு? 

 இந்த மரணத்திற்கு உன்னிடம் என்ன பதில் இருக்க முடியும் ராஜபக்சே.  நீ செய்த இந்த கொலைவெறிக்கு உனக்கு பூ போட்டு ஆரத்தியா எடுப்பார்கள். உன்னுடைய படுக்கை முட்படுக்கை ஆகட்டும், நீ அருந்தும் தண்ணீர் சாக்கடையாய் மாறட்டும், நீ உண்ணும் உணவு விஷமாகட்டும். இதுவே தமிழ் மக்களின் சாபம். நீ செய்திருக்கிறாய் அவ்வளவு பாவம்.

ராஜபக்சே உன்னுடைய முடிவின் ஆரம்பம் இது. மனசாட்சி உள்ளவர்கள் உனக்கு எதிராக சாட்சியளிப்பர்கள். மீண்டும் ஒரு தமிழர் ஆட்சி இலங்கையில் மலரும் அந்த நாள் ராஜபக்சே உன்னுடைய  வீழ்ச்சி நாள் என்பதை மறந்துவிடாதே. 

தமிழ் மக்களை துன்பப்படுத்துகிறாய் உன்னுடைய பாவத்தை கொஞ்சமாவது குறைக்க எண்ணினால் உடனே அவர்கள் வாழ வழிவகை செய், இல்லையேல் பாவக்கணக்கு கூடிக்கொண்டே போகும். ராஜபக்சே அரசே! இனியாவது தமிழ் மக்களுக்கு  நல்லது செய்ய முயற்சி செய். உன்னிடம் கெஞ்சுவதை தவிர என்னால் ஈடு  செய்ய ஒன்றுமில்லை இப்போது.



    

வெள்ளி, மார்ச் 23, 2012

முன்ஜென்ம நியாபகம்...



                           நாம் இவ்வுலகில் பிறக்கிறோம் இங்கு வாழவும் ஒரு சந்தர்பம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் நாட்களில் நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வரு விசயங்களையும் நமக்கு நடக்கும்போது மட்டுமே தெரியும்படியாக ஒவ்வரு விநாடியும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. உலகம் மிக பிரம்மாண்டமான ஒரு உருண்டை பந்து அதில் நாம் மிக மிக சிறிய உயிர். இந்த உயிரானது உடலைவிட்டு பிரிந்து அடுத்த பிறவியை எடுக்கிறது. இதைத்தான் உடல் ஒரு சட்டை ஆத்மா என்பது யாராலும் அழிக்க முடியாத      
நித்யசொரூபமானது என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டு உள்ளது .நமக்கு அடுத்த நொடி மறைக்கப்பட்டும்கூட தவறுகள் குறைவதில்லை. ஆனால் அடுத்து நடக்கப்போவது அனைத்தும் முன்பே தெரிந்துவிட்டலோ அது பல மோசமானா செயலையே நமக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்து முறைப்படி பார்க்கும் போது உடல் என்பது ஒவ்வரு காலகட்டத்திலும் நிலை மாறி பின் மீண்டும் பிறப்பெடுக்கிறது இப்படியாக பிறவி என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும், எடுக்கவேண்டிய பிறவியை எடுத்தே தீருவோம். அப்படியாக எடுக்கப்படும் பிரவியானது நமது முற்பிறவியின் பாவ, புண்ணியங்களை அடக்கியதாக இருக்கும். உயிர் ஒரு உடலை அடைவது என்பது அவரவர் "கர்மா" என்று பொருள்படுகிறது. நமக்கு முற்பிறவி என்பது நாம் அறியாதா ஒன்று என்றாலும் ஒரு சிலருக்கு முற்பிறவியின் நியாபகங்கள் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியான ஒரு பெண்தான் 1987 ஆம் வருடம் பிறந்த பூர்ணிமா தனது மூன்றாவது வயதில் தனக்கு முற்பிறவியில்  ஒரு விபத்து நடந்ததாகவும் அந்த விபத்து ஒரு பஸ் தன்னுடைய மார்பின் மீது ஏறிவிட்டதாகவும் கூரியிருக்கிறாள். அவள் கூரிய  அனைத்தும் சரியாக இருந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் முற்பிறவியில் விபத்து நடந்த மார்பு பகுதியில் உள்ள தழும்பு பூர்ணிமா உடம்பில் பிறப்பில் இருந்தே இருந்திருக்கிறது. முற்பிறவியில் ஒரு ஆணாக பிறந்திருந்தார் அப்போது விபத்து நடந்ததாக சொல்லப்படும் ஆண்டு ஏப்ரல்  1985 பூர்ணிமா பிறந்தது இலங்கையில் 1987. முற்பிறவியில் தனது உறவினர்களை சரியாக அடையாளம் சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்படவைதார் பூர்ணிமா.

ஷர்மிளா தேவி பிறந்தது 1929  ஆம் ஆண்டு, மூன்று வயதுவரை எல்ல குழந்தைகளை போல் இருந்த சர்மிளா தேவி தில்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அதற்கு பிறகு நான்காவது வயதில் தனது முற்பிறவி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார் முற்பிறவியில்  தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தனக்கு கணவனும் ஒரு ஆண் குழந்தையும் இருபதாகவும் தனது ஊர் தில்லியில் இருந்து 45  கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரா என்ற ஊர் பெயரை சொல்லி தான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்ததாகவும் கூரி   விலாசதையிம் கொடுத்துள்ளார். அந்த விலாசதிட்கு ஷர்மில தேவியின் அப்பா கடிதம் எழுதினார் அந்த கடிதத்திற்கு பதில் வந்தது அதில் அவர் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மை என்று வந்தது. பிறகு முற்பிறவியில் உள்ள அந்த கணவனும் ஷர்மில தேவியைவிட சற்று வயது அதிகமுள்ள அவரது முற்பிறவி மகனும் டில்லிக்கு வந்து சர்மிளா தேவியை பார்த்தனர். சர்மிளா தேவி தாய்மை உணர்வோடு தன முற்பிறவி மகனை பார்த்து அழுதுள்ளார். 


முன் ஜென்ம நியாபகம் பற்றி சில படங்கள் கூட  பார்க்க சுவாரசியமாக இருக்கும் ஆனால் அவை உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்?.பலருக்கு மறைக்கப்பட்ட ரகசியம் சிலருக்கு அம்பலமாகிவிடுவது சில நேரங்களில் நிம்மதியை தொலைக்கும்படியாகிவிடுகிறது.சில நேரங்களில் அதுவும் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. 
    
"எனக்குள் ஒருவன்" படம்  கூட முன்பிறவியில் தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் படமாக எடுக்கப்பட்ட படம். உண்மையில் இப்படி ஒரு முன் ஜென்மத்து நினைவு வந்தால் ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பது கற்பனையாக சொல்லிவிட முடியாது. அது வரமா? சாபமா? என்பது அவரவர்களது  வாழ்கையை பொறுத்த விசயம். 

முற்பிறவி பற்றி கடைசியாக வந்து சக்கைபோடு போட்ட   படம் "ஓம் சாந்தி ஓம்". இவ்வாறாக ஒரு முற்பிறவி நியாபகம்  வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. உங்களால் அது முடிந்தால் அந்த அனுபவம் பற்றி சொல்லும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.




செவ்வாய், மார்ச் 20, 2012

அரசியல் இது அரசியல்...


நாடிட்கும் நாடு விடுதலைக்கும் பாடுபட்ட பல நல்ல தலைவர்கள் விட்டுச்சென்ற இந்தியாவை எப்போது அரசியல் சானக்கியர்களிடம் ஒப்படைதோமோ அப்போது தொடங்கியது "தடியெடுத்தவன் தண்டல்காரன்"என்ற எங்கள் ஊர் பழமொழிக்கு சான்று. ஒரு நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற ஒட்டுமொத்த எண்ணங்களும், எதிர்பார்புக்களுமே ஜப்பான் என்னும் ஒரு  சிறிய நாட்டை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது. நாடு வளம்பெற எடுக்கும் எல்லா ஏற்பாடுமே வரவேற்கத்தக்கது. ஒரு நாடு ஏழைகளை தரம் உயர்த்த நினைத்தால் அந்த நாடு ஏழைகள் இல்லாத நாடாக மாற்ற முயற்சிகள் எடுக்கவேண்டும், அதைவிடுத்து ஏழைகளை ஏழையாகவே வைத்து அவர்களிடம் தேர்தல் வந்தால் மட்டும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி உங்களுக்கு அதை செய்வேன், இதை செய்வேன் என்று வாய் கிழிய சவுடால்விடுத்து. மக்களை  அந்த  பாடுபடுத்தும்,  அரசியளும், அரசியல்வாதிகளும்  என்ன கிழித்துவிட்டார்கள்  மக்கள் நலனுக்காக என்று பாரத்தால் நமக்குதான் இதயம் நொறுங்குகிறது. 

     
ஒரு பட்ஜெட் மேடையை கிட்டதட்ட பாக்சிங் மேடையாக மாற்றிய பெருமை மம்தா அவர்களையே சாரும். தினேஷ் திருவேதி அவர்களின் ரயில்வே பட்ஜெட் தன்னை ஆலோசிக்காமல் எடுத்த முடிவு என்று தினேஷ் திருவேதியை ராஜினாமா செய்யவைததோடு   மட்டுமல்லாமல் மதிய அரசை பயமுறுத்தி இருக்கிறார் என்றால் நாட்டுக்காக அரசியலா? இல்லை அரசியல்வாதிகளுக்காக அரசியாலா? என்று சற்று நிதானமாக யோசித்தால் உலகில் எங்குமே நடக்காத சாதனையை இந்தியா நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உணரலாம்.

எப்படி சச்சின் அவர்களின் சாதனையை யாராலும் செய்ய இயலாதோ அதேபோல் மம்தா அவர்களின் இந்த   சாதனையை யாராலும் நிகழ்த்த முடியாது என்றே தோன்றுகிறது. ஏதோ வீட்டுக்  கணக்கை எனக்கு தெரியாமல் செய்துவிட்டதை திரும்பப்பெறுவது போல நாட்டுக்கணக்கை திரும்ப பெற்றுவிட்டார். தனக்கு அடிபணியாத யாரையும் தான் விட்டுவைக்க போவதில்லை என்பதை எவ்வளவு வெளிப்பாடாக செய்கிறார் இந்த அம்மையார். நமது நாட்டில் நிகழும் அரசியல் கோமாளித்தனத்தை பாரத்தால் நம்மீது படையெடுத்த ஆப்கானிஸ்தான் மன்னர்களை மிஞ்சிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் தான் நினைத்ததை சாதித்துவிட்ட சச்சின் அவர்களுக்கும், மம்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம்  வேறு  என்ன சொல்லமுடியும் இப்போது.

புதன், மார்ச் 14, 2012

" THE ARTIST"

 

" தி ஆர்டிஸ்ட்" படம் ஆஸ்கர் அவார்டுகளை குவித்தது பற்றி அறிந்து அந்த படத்தை பார்த்தபோது அந்த படம் உண்மையிலேயே ஆஸ்கர் பெற தகுதியான படம் என்பது புரிந்தது. வசனங்கள் பேசி நடிப்பதைவிட உடல் மொழியே வசனமாக்கும் பேசும் படம் என்பது சார்லி சாப்பலின் அவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை  மாற்றிவிட்டது இந்த படம். ஒவ்வரு காட்சியமைப்பும் அதற்கு சான்று எனலாம். ஒரு முழு திரைப்படத்தையும் வெறும் காட்சி வாயிலாக மட்டுமே மக்களை கவர்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.


ஒரு நடிகனின் ஏற்ற, இறக்கங்கள் பற்றி அழகாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நடிப்பின்  உச்சியில் இருக்கும் எல்லார்க்கும் இந்த படம் பொருந்தும். புகழோ, பணமோ என்றுமே நிலையானது அல்ல என்பதே படத்தில் சொல்லப்படும் கருத்து. அதன்படி படத்தின் முதல் காட்சியில் படம் ஓடிக்கொண்டிருக்கும். திரைக்கு பின்னல்  ஹீரோ நிற்கிறார். இந்த காட்சி சொல்லப்படும் கருத்து படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கதாநாயகன் வேறு, நிஜமான கதாநாயகன் வேறு என்பதே ஆகும்.
 

படம் முடிந்ததும் திரைக்கு முன்னால் தோன்றும் கதாநாயகன் தன்னை மட்டுமே படத்தின் வெற்றிக்கு காரணமாக காட்டிக்கொள்வது. அழகான அந்த கதாநாயகனை மக்கள்  ஆரவாரிக்கின்றனர்.

மக்கள் அந்த கதாநாயகனை பார்த்து ரசிக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பெண் அவரை  இடித்து விடுகிறார் எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கும்போது கதாநாயகன் அந்த பெண்ணை கேலி செய்கிறார். உடனே அந்த பெண் அவரை  முத்தமிடுகிறார். இவ்வாறாக போகும் படத்தில் முத்தமிட்ட பெண் யார்? என்று செய்தி வருகிறது.



மறுநாள் அந்த கதாநாயகனது மனைவி அந்த செய்தியை படித்துவிட்டு கோபமாக  அமர்ந்திருக்கும்போது கதாநாயகன் சாப்பிட வருகிறார். இந்த காட்சியில் படத்தில் கதாநாயகன் கதாநாயகியை உருகி உருகி காதல் செய்வதுபோல் நிஜவாழ்க்கையிலும் அவர்களது மனைவியையும்
 காதலிக்க முடியாது என்பதை காட்சிபடுத்திய விதம் அழகானவை. படத்தில் காமிக்கப்படும் நாயானது மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவது ரசிக்கவைக்கிறது.

ஒரு நடிகை எப்படி உருவாகிறார் என்பதை அடுத்த காட்சியில் கதாநாயகனை அந்த பெண் கதானயகியாகியாக ஆகும்போது உள்ள காட்சி மிக சிறப்பானதாக அமைந்தது. ஒரு நடிகன் எப்படி உச்சத்தை அடைந்தான் பிறகு வீழ்ச்சி அவனை எவ்வாறு வீழ்த்தியது பிறகு மீண்டும் அந்த கதாநாயகன் தான் விட்ட இடத்தை பிடித்தானா ? என்பதை காட்சி படுத்திய விதம்  ரசிக்கும்படியாக அமைந்தது.

முதல் பகுதியில் கதாநாயகனின் முயற்சியால் அறிமுகமாகும் கதாநாயகி. அந்த நன்றிக்கடனுக்கும் அந்த கதாநாயகன் மேல் கொண்ட காதலுக்கும் சேர்த்து அவனுக்கு ஒரு வாய்ப்பை வாங்கித்தந்து கதாநாயகன் வாழ்க்கை மட்டுமல்ல உயிரையும் காப்பாதுகிறாள். படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகம் இல்லை.

வியாழன், மார்ச் 08, 2012

பெண்ணின் பெருமை...


இன்று (08-03-2012) உலக மகளிர் தினம். அதற்காக எல்லா பெண்களுக்கும் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகை ஆளும் இனமாக பெண்கள்தான் முதன் முதலில்  இருந்தனர். காட்டு வாழ்கையில் பசிக்கு உணவு தேடுவதற்கும் கொடிய மிருகத்திடம் இருந்து பாதுகாப்பதற்கும் உடல் வலிமை தேவைப்பட்டது   அந்த  நேரத்தில் ஹெற்றோஜென் அதிகாமான   வலிமைமிக்க ஆண்கள் வலிமை குறைந்த பெண்களை ஆள அப்போது ஆரம்பித்தது பெண் அடிமைத்தனம். ஒரு பெண் தனக்கு கட்டுப்பட்டு  நடக்க வேண்டும் என்று ஒரு ஆணின் தீராத ஆசைதான் பெண் அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அவளுக்கான கல்வி மறுக்கப்பட்டு வெறும் கலவிக்கென்று மட்டும் பயன்படுத்தப்படுபவள் ஆனாள். அக்காலத்தில் பெண்ணிற்கு உரிய அணைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹெற்றோஜென்  அதிகமுள்ள ஆண் பெண்ணிற்கான அறிவுசார்ந்த விசயங்களை தடுத்து பெண் என்பவள் ஆணின் அடிமை என்பதை பெண்ணின் மனதில் ஆழமாக பதியவைத்து விட்டனர். "கணவனே கண் கண்ட தெய்வம்" என்றெல்லாம் அவள் மனதில் அடிமைத்தனத்தை விதைத்தனர். ஒரு ஆண் என்ன சொன்னாலும் கேட்டு அதன்படி நடப்பதே ஒரு நல்ல பெண்ணின் அடையாளம் என்பதை வலியுறுத்து "சதி" என்னும் சதிச்செயலை செய்து கணவன் இறந்தால் மனைவியும் அதே சிதையில் இறக்கவேண்டும் அவள்தான் உண்மையான பெண் என்றெல்லாம் இருந்ததை "ராஜ ராம் மோகன் ராய்" அவர்களின் தீவிர எதிர்ப்பினால் அந்த நிலைமாறியது.


        ஒவ்வரு கட்டமாக ஒவ்வரு கண்டமாக மாறித்தான் பல மாற்றங்களை ஏற்றித்தான் பெண்கள் இந்த நிலையை அடைந்தனர். பெண்களுக்கு சொத்து மறுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, குழந்தை திருமணம் நடத்தப்பட்டு, சதி என்னும் கொடிய சதிச்செயல் அரங்கேற்றப்பட்டு, பெண் சிசுக்கொலை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, பிள்ளை பெரும் இயந்திரமாக இருத்தப்பட்டு இப்போதுதான் பெண்கள் வெளிச்சம் பெறப்பட்டிருக்கிரார்கள். 


இன்றும் 33 சதவிகிதம் இடஒதுக்கிடு பெறமுடியாமல் தவிக்கும் நிலை இருந்தாலும் பெண்கள் இல்லாத  துறை இன்று 
இல்லை என்னும் அளவிற்கு வளர்த்து உள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தை நிர்வாகிக்கும் ஒரு பெண்ணால் ஒரு நாட்டையும் நிர்வாகிக்கும் தலைவராக 
மாறிவிட்டனர்.


                 உலக அளவில் சிறந்த திரைப்படம் மட்டுமல்ல ஆஸ்கர்  அவார்ட்  பெற்ற " THE IRON LADY" படம் ஒரு பெண் என்பவள் நினைத்தால் வீட்டை  மட்டுமல்ல  பிரிட்டன் நாட்டை ஆளவும் முடியும்  என்பதை நிருபித்த மார்கரட் தட்சர் அவர்களது வாழ்க்கை வரலாறை அற்புதமாக படமாக்கி உள்ளனர். ஒரு வலிமைமிக்க பெண்மணியாக பிரிட்டனை பதிமூன்று வருடம் ஆட்சி செய்தவர்.


மார்கரெட் தட்சேர் ஆட்சி செய்த காலத்தில் இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தார். 


வீட்டையாளும் பெண்ணாக இருந்தாலும் நாட்டையாளும் பெண்ணாக 
இருந்தாளும் அவர்களால் வீடிட்கும், நாடிட்கும் பெருமை என்ற வகையில் அத்தகைய அணைத்து 
பெண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.




  

செவ்வாய், மார்ச் 06, 2012

"MERA NAAM JOKER" - படம் ஒரு சகாப்தம்...


"மேற  நாம் ஜோகர்" ராஜ் கபூர் நடிப்பில் ஒரு அழகான படம். ஒரு ஜோகர் வாழ்வில்  மற்றவர்களை மகிழ்விக்கலாமே தவிர அவர்களது
 வாழ்க்கை துயரம் நிறைந்தது  என்பதை
 நாம் "சார்லி சாப்லின்" அவரது வாழ்க்கையில்  பார்க்க முடியும். அதேபோல் ஒரு ஜோகர் வேடத்தை ஏற்று நடித்துள்ளார் ராஜ் கபூர்  அவர்கள். அவரது வாழ்கையில் மூன்று பெண்கள் ஒவ்வரு காலகட்டத்திலும் வருகிறார்கள் எப்படி அவரைவிட்டு பிரிகிறார்கள் என்பதும் இறுதியில் அவர்  ஜோகராகவே  வாழ்கையை தொடர்வது   என்ற தனது  காதல் தோல்வியை படம்  முழுக்க  சோகத்தை மறைத்துக்கொண்டு ஜோகராகவே வாழ்த்திருக்கிறார் ராஜ் கபூர் இந்த படத்தில்.


பள்ளி பருவத்தில் தனது தந்தை பற்றி அறிய அவனது தாயிடம் கேட்டு தெரிந்துகொள்கிறான் அவனது அப்பா ஒரு ஜோக்கர் என்பதை அறிந்து  அன்றிலிருந்து  அவனும் ஒரு ஜோக்கராக வேண்டும் என்பதில் ஆசைகொள்கிறான். முதல் காதல் அவனது ஆசிரியை மீது ஏற்படுகிறது


             முதல் காதல் அதுவும் ஆசிரியை மீது என்பதால் அந்த காதல் தோல்வியை தழுவுகிறது. இந்த பொருந்தா காதலை அழகாக காட்சிவடிவம் தந்திருக்கிறார்கள். முதல் காதல் தோல்வி எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று என்றாலும் அதன் வலி வலிமைமிக்கது என்பதை காட்சி படுத்தியவிதம் அழகாக அமைக்கபட்டிருக்கிறது இந்த படத்தில். தனது தந்தை போல் ஜோக்கர் ஆகவேண்டும் என்ற ஆசையோடு பள்ளி படிக்கும்போதே தெருவில் ஜோக்கர் வேஷம் போட்டதால் பள்ளியில் இருந்து நீக்கப்படும்போது அந்த காட்சி மனதை கஷ்டபடுதினாலும் ஒரு ஜோக்கர் எப்போதும் அடுத்தவரை சிரிக்க வைபத்திலேயே அவனது வாழ்க்கை கஷ்டங்களை புதைக்கிறான் என்பது இப்படத்தில் நன்றாக காட்சியாக்கப்படிருகிறது.



தனது பிழைப்பை தேடி தர்மேந்திரா நடத்தும் சர்கஸ் ஒன்றிற்கு வரும் ராஜ் கபூர் தனது கோமாளிதனதால் அந்த சர்கசிலேயே ஜோக்கராக மக்களை மகிழ்விக்கிறார்.
 அந்த சர்கஸில் வெளிநாட்டு பெண் ஒருவர் மீது காதல் கொள்ளும்போது அந்த காதல் நிலைக்காது என்பதை அறிந்து வருந்துவதும்.
தனது மகன் ஜோக்கராக இருப்பதை அறிந்த ராஜ் கபூர் தாய் அந்த சர்கசிலேயே உயிரை விடும்போது கண் எதிரே தாயின் உடலை வைத்துக்கொண்டு தனது சோகத்தை காட்டிக்கொள்ளாமல் ஜோக்கராக சென்று மக்களை சந்தோசப்படுத்த பாடுவதும் ஆடுவதுமான  நடிப்பு நடிப்பின் உச்சத்தை தொடுகிறது. தாயின் பிரிவை தாங்க முடியாமல் தன்னிடம் உள்ள ஜோகர் பொம்மையை கடலில் வீசி எறியும்போது, ஒரு நாய் அதை கவ்விக்கொண்டு வந்த ராஜ் கபூரிடம் கொடுக்கும்போது அவர் விரும்பாவிட்டாலும் அந்த ஜோக்கர் என்கின்ற தனது அடையாளத்தை மறைக்க முடியாது என்பதை காட்சியில் காட்டி மனதை மயக்கிறது  எனலாம்.
     ஒரு ஆதரவற்ற ஆண் வேஷம் தரித்த  பெண்ணாக வரும் பத்மினியை ஆதரிக்கும்போது ராஜ் கபூரிட்கு பத்மினி பெண் என்பது தெரியாது. ஒரு காட்சியில் அது தெரிந்ததும் கோபப்படும் ராஜ் கபூர் அவரை சமாதனபடுதும் ஒரு பாட்டினை பாடுகிறார் பத்மினி, ராஜ் கபூர் சமாதானம் அடைந்ததும் இருவரும் ஒரு நாடக கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.பத்மினி அழகை பார்த்து அவரை ஒரு கச்சாரிக்கு அலைக்கபடுகிறார். அந்த அழைப்பை விரும்பாவிட்டாலும் பத்மினிக்காக அந்த கச்சாரியை நடத்துகிறார் ராஜ் கபூர். அந்த கச்சேரிக்கு  ஒரு மிக பெரிய நடிகர் வருகிறார்.

பத்மினியின் அழகையும், நடனத்தையும் பார்த்து அந்த நடிகர் பத்மினியை நடிகையாக்க முடிவெடுக்கிறார். இதை சற்றும் எதிர்பார்காத பத்மினி நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை ராஜ் கபூர் விரும்பவில்லை. பத்மினி பெரிய நடிகையானதும் அந்த நடிகரே மணந்துகொள்கிறார். மீண்டும் ஒரு காதல் தோல்வி என்ற நிலையில் தனது பழைய நிலைமையான ஜோகர் வேடத்தை ஏற்றுக்கொள்கிறார் ராஜ் கபூர்.



காலம் கடந்த நிலையில் மக்களை மகிழ்விக்கும் ஒரு ஜோகராகவே வாழ்த்து ஒரு நாள் தான் காதலித்த மூன்று பெண்களையும் தனது சர்கஸ் நிகழ்ச்சிக்கு தனது ஜோகர் பொம்மை மூலமாக அழைப்பு விடுகிறார். அந்த மூன்று பெண்களும் ராஜ் கபூர் பற்றிய நினைவுகளோடு அந்த சர்கஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். அப்போது தன்னிடம் உள்ள இதயத்தை காணாமல் போனதாக நடித்து எல்லோரது மனதிலும் நடிப்பால் இதயத்தை நிறப்புகிறார். ஒரு ஜோகர் தனக்குள் எத்தனை கவலை இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு மக்களை மகிழ்விபதே கடமை என்பதை காட்டி தனது பெயர் ஜோகர் என்பதை மக்கள் மனதில் விதைப்பதோடு படம் நல்லபடியாக முடிகிறது.


                                                       

வெள்ளி, மார்ச் 02, 2012

இரவில் வாங்கினோம் சுதந்திரத்தை இன்னும் விடியவே இல்லை...

                     
                 "இரவில் வாங்கினோம் சுதந்திரத்தை இன்னும் விடியவே இல்லை" என்னும் வரிகளுக்கேட்ப இன்னும் இருளில்தான் இருக்கிறோம் மின்வெட்டு காரணமாக. இளைய சமுதாயம் வரண்ட வாழ்கையை மின் விநியோகமற்ற நிலையில் நாம் காண முடிகிறது. ஒரு சமுதாயம் முன்னேற கல்வி அவசியம் ஆனால் நமது கல்வியோ மாணவனை மந்த நிலைக்கு கொண்டுசெல்கிறது. இப்போதும் நம் கல்வி முறை மனனம் செய்த மாணவனுக்கே உரியது என்ற கோட்பாடுகள் அடிப்படையில் இப்போது அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல கண் கோளாறு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிட்டது இந்த மின்வெட்டு. பணமுள்ளவன் வீட்டில்   UPS பொருத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் நிலை என்ன?. அந்த வீட்டில் உள்ள மாணவன் படிக்க வேண்டாமா?. கல்வி வழங்குவதில்தான் ஏற்றத்தாழ்வு என்றால் பரீட்சைக்கு படிப்பதிலும்  ஏற்றத்தாழ்வு வந்துவிட்டது என்றால் அது  அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்  என்பதே உண்மை.

 இந்த உலகத்தை படைத்தபோது எல்லாம் பொதுவாகத்தான் இருந்தது ஆனால் இப்போது பணம் உள்ளவனுக்கு தனி வாழ்க்கை பணமற்றவனுக்கு  தனி வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை கடுமையாக பாதிப்பது நடுத்தரவர்க்க மாணவர்களே. இருள் வீட்டில்  மட்டும் இல்லை அவர்கள் வாழ்க்கையிலும் இருக்கிறது இப்போது. தேர்வு நாள் அன்று இப்படி குறைவான வெளிச்சத்தில் படித்தால் மாணவர்கள் எப்படி நன்றாக தேர்வு எழுதமுடியும்? . ஏற்கனவே குற்றங்களும், குற்றவாளிகளும்  பெருகிவரும் நிலையில் இப்போது இன்னும் அதிகமாக ஒரு வாய்ப்பு அதிகரித்துள்ளது இந்த மின் வீட்டு காரணமகாக.


பள்ளி நாட்கள் எப்போதுமே சந்தோஷமிக்க நாட்கள் ஆனால் இப்போது பள்ளி வாழ்க்கை சுமையாக மாறிவிட்டது. இப்படி ஒரு இருள்படிந்த கல்வி மாணவர்களுக்கு ஆரோக்கியமானது அல்ல இப்படி கல்வி கற்பது அவர்களுக்கு மன அழுத்தத்தையே தரும். 

கோவையில்  மட்டும்   கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் தொழில் வர்த்தகங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எந்த மின்வெட்டால், தினமும்  ஐம்பது கோடிக்கு  மேல்   நஷ்டமாகிறது. தொழில் முடங்கி சாப்பிடவும் பணம் இல்லாமல் பல வெளியூர்  வாசிகள் தவித்து வருகின்றனர். எட்டு மணிநேரம் மின் வெட்டு என்பது மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வரு தொழிலாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகமயமானது  தொடர்ந்து எல்லா நாடுகளுமே வளர்ச்சி விகிதத்தை நோக்கி விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நாம் அடிப்படை தேவைகளுக்கு கையேந்தி நிக்கும் நிலைமை நம்முடைய வளர்ச்சியை தடை செய்வதாக உள்ளது. இது நீடித்தால் பல குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மாணவர்கள் மடிப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது. உலக அளவில்  நமது தொழில் நஷ்டமடைய வாய்ப்புள்ளது என்பதை அரசு அறிந்து  சீக்கிரம் ஒரு நல்ல  நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டையும், மக்களையும், மாணவர்களையும்  காப்பாற்ற முடியும்.