வெள்ளி, ஜூலை 27, 2012

பொறுப்பில்லாத நிர்வாகத்தால் ஏற்பட்ட மரணம்...


பணம் ஒன்றே வாழ்கையின் முக்கிய குறிக்கோளாய் வாழும் காலம் வந்தபின்பு, தன் குடும்பம் என்பதை தாண்டி பலர்  யோசிப்பதே இல்லை. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் துடிக்கும் மனம் அடுத்தவர் என்றால் அதே மனம் கல்லாய் மாறும் சுபாவம் கேவலத்திலும் கேவலம். வெறும் பணம்தான் முக்கியமென்றால் மனிதன் எப்போதுதான் உண்மையிலேயே மனிதாபிமானமுள்ள மனிதனாய் மாறப்போகிறான். இன்னும் எத்தனை சுருதியை பலிகொடுத்து பாடம் கற்கப்போகிறோம். ஒரு அழகான குழந்தை அந்த அவலச்சனமான பேருந்தில் உட்காரும் இடத்தில் ஒரு ஓட்டை வழியாக விழுந்து இறக்கும் கொடுமை இன்னும் எவ்வளவு காலம் தான் சகித்துக்கொள்ளமுடியும். கும்பகோணம் தீ விபத்தில் 90 குழந்தைகளை தீக்கு பலிகொடுத்துவிட்டு இப்போது அலட்சியம் காரணமாக சுருதி என்னும் குழந்தையை கொன்றாகிவிட்டது.இதற்கு யார் காரணம்? யார் இதற்கு பொறுப்பேற்பது?பணமே பிரதானம் என்று நினைத்த அந்த பள்ளி நிர்வாகமா? பேருந்தின் சொந்தகாரரா? பேருந்தை இயக்கியவரா? பேருந்தை பராமரித்தவரா? இல்லை அந்த சம்பவம் நடந்த பதினைந்து நாள் முன்பு அந்த வண்டியை தரமுள்ளது என்று வாக்களித்த பிரேக் இன்ஸ்பெக்டரா? அந்த குழந்தை கற்கவந்த பாவத்திற்காக அதன் உயிரை வாங்கியாகிவிட்டது. இவர்கள் இப்போது நிம்மதியாக தான் உண்டு தனக்கான சம்பாத்தியம் உண்டு தான் குடும்பமுண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழப்போகிறார்களா?.

மனசாட்சியை கொன்று சொத்து சேர்ப்பதுதான் வாழ்கையின் லட்சியமா? போதும் ஒவ்வரு உயிர் போனபின்பு பாடம் கற்று என்ன பயன்?. செய்வதைகூட சரியாக செய்யாமல் சின்ன பிள்ளைகள் செல்லும் பேருந்தில் இவ்வளவு கேவலமாக வைத்திருந்த அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஒவ்வருவரும் சட்டத்தின் பிடியில் தப்பிக்கவிடக்கூடாது. அப்போதுதான் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஞாயிறு, ஜூலை 22, 2012

"Satyamev Jayate" - அமீர்கான் நடத்தும் அசத்தல் நிகழ்ச்சி...

அமீர்கான் உடைய தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். அமீர்கான் அவரது நடிப்பில் வியந்த விஷயங்கள் மிகஅதிகம் அவர் ஆங்கில திரைப்பட நடிகர் மெல் கிப்சன் போன்று அபார திறமை உடையவர். அமீர்கான் தனது நடிப்பின் ஆற்றலை மிககச்சிதமான கதாபாத்திரத்தின் மூலமாக தன்னை சமுதாய சிந்தனையுள்ள மனிதராக அடையாலப்படுதிக் கொண்டார். லகான், 3 idiots , ரங் தி பசந்தி போன்ற படங்களின் மூலமாக சமுதாய கருத்தினை மையமாக கொண்ட படங்கள் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவை. தனது சாக்லேட் ஹீரோ தோற்றத்தை உதறி எறிந்துவிட்டு சமுதாய சிந்தனையோடு படங்களை அணுகிய விதம் அமீர்கானுக்கே உரிய சிறப்பு அம்சம். 

அமீர்கான் தன்னை சமுதாயதின் அங்கமாக அணுகிய விதம் அவரை சினிமா ஹீரோ என்பதோடு இல்லாமல் நிஜவாழ்க்கையிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கே உண்டான சமுதாய அக்கறையை கையில் எடுத்துக்கொண்டு அதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "சத்திய மேவ ஜெயதே" நிகழ்ச்சி கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தவாரம் நதிநீர் மாசடைவதை பற்றிய பிரச்சனையை மிக அழகாக  எடுத்து சொன்ன விதம். மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு அடையமாட்டார்களா? என்கின்ற பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஒரு விதத்தில் நதிநீர் மாசடைய நாமும் ஒரு காரணம் என்பதை அறியும்போதும் நமக்கு அதற்கான தண்டனையை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கப்போகிரார்கள் என்னும் கொடுமையே நமக்கு மிகப்பரிய தண்டனையாக மனதில் முள்ளாக தைக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்து விட்டுசெல்வோமோ இல்லையோ கண்டிப்பாய் வியாதியை விட்டு செல்வோம் என்பது மிகவும் வருத்த வேண்டிய விசயமாக இருக்கிறது. நல்ல காற்று, நல்ல குடிநீர், நல்ல எதிர்காலம் எப்போது வரும் என்பது தெரியாமல் மனம் ரனமாகிறது. நாளைய சந்ததியினர் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள் நம்மைவிட அதிகமாக இருக்கும் என்பது எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. என்னதான் நாம் பல விசயங்களை கண்டுபிடித்தாலும் பூமிக்கு நாம் செய்த துரோகத்தை நம்மால் சரிசெய்ய இயலாது. நாம் கொஞ்சம் முயற்சித்தால் பஞ்சபூதங்களை மேலும் மாசடையாமல் தடுக்கலாம்.   
 நாமும் நினைத்தால் சாதிக்கலாம் இதுபோன்ற நல்ல நிகழ்சிகளை ஊக்குவிப்பதின் மூலமாக. நாமும் முயற்சி செய்வோம் இந்தியாவை வளமாக்க பாடுபடுவோம் சத்திய மேவ ஜெயதே. 

" MUGHAL - E- AZAM" ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படம்...


 முகல் - - அசாம் படம் தமிழில் மொழிபெயர்க்கபட்டு அக்பர் என்ற பெயரில் வெளிவந்தபோதிலும் தமிழில் சரியாக ஓடாத இந்த படம் ஹிந்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இப்படம் ஒரு சரித்திரத்தை கிட்டதட்ட பதினைத்து வருடம் தக்கவைத்துக்கொண்டது என்றால் அது மிகையாகாது. படம் பலவருட போராடதிட்குபிறகுதான் வெளிவந்தது அதற்கு காரணம் இப்படத்தின் ஒவ்வரு காட்சியமைப்பும் மிக பிரம்மிக்கத்தக்க வகையில் எடுத்துக்கொண்ட முயற்சிதான். ஒரு மென்மையான காதலை மையமாக கொண்ட படத்தின் வடிவமும் முகாலைய காலத்து வடிவமைப்பை கொண்டுவந்தது அதை நம் கண்களுக்கு விருந்தாக்கியது அந்த காலத்திற்கே சென்றது போன்ற உணர்வினை கொண்டு வந்தது நிச்சயம். இந்த படம் பிரம்மிப்பின் முக்கிய அம்சம் மதுபாலாவுடைய நடிப்பு ( அனார்கலி) இந்த படத்தில் மதுபாலாஅனார்கலியாக உருமாறியிருந்தார்.
இந்த படம் 1960 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் கே. ஆசிப் மற்றும் இந்த படத்தில் அக்பராக பிரிதிவிராஜ் கபூர் நடித்துள்ளார். சலிமாக திலிப் குமார், ஜோதா பாயாக துர்க்கா கோட்டி நடித்துள்ளார். ராஜகுமாரன் சலீம் நாட்டிய தாரகையான அனார்கலியை காதலிப்பதால் அவர் தந்தை மற்றும் அரசராகிய அக்பர் எதிர்கிறார். ஒரு அழகான காலத்தால் அழிக்க முடியாத  காதல் காவியம் கண்ணீறால்  நனைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுத்துவது மதுபால நடிப்பின் உச்சகட்டம். ஒரு அழகான நடன தாரகையாக நடனமாடுவதாகட்டும், காதல் வயப்பட்டு வெட்கப்படுவதாகட்டும், காதலனை பிரிந்து துயரில் அழுதுகொண்டே அழகான பாடல் ஒன்றை சிறையில் இருந்தபடி பாடுவதாகட்டும் காட்சிக்கு காட்சி அழகு பதுமையாக உலாவரும் மதுபாலா நடிப்பு படத்தின் உயிர் துடிப்பு.
அரசபையில் தனது காதலன் சலீம் மற்றும் அரசர் அக்பர் முன்பாக தன் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்பதை தனது பாட்டின் மூலமும் நடன அசைவுகள் மூலமாகவும் காதலை கொடு அல்லது மரணத்தை கொடு என்று அரசர் முன்னால் பாடி நடனமாடும் ஆசாத்திய துணிச்சல் கொண்ட அனார்கலி. அத்தகைய அனார்கலிக்காக தனது தந்தையையே எதிர்த்து போர்களத்தில் போராடும் சலீம் என்று தங்கள் உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கும் படமாக இந்த படம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
தன் மகனிடம் அனார்கலியை மறக்கும்படி கெஞ்சுவதாகட்டும் அதனை மறுக்கும் சலீமுடன் சண்டையிட்டு சலீமை கைதுசெய்து மரணதண்டனை விதித்து அதற்காக வருந்துவதாகட்டும் பிரிதிவிராஜ் கபூர் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவரது அந்த கடுமையான பார்வை அதட்கேட்ப வசனங்கள் அவரது உடல் மொழி எல்லாமே அக்பர் கதாபத்திரதிற்கு ஏற்றவாறு இருந்தது.
இந்த படத்தின் முக்கிய பங்கு மதுபாலாவின் அழகாண நடிப்பு என்பதோடு சரித்திர வரலாற்றை பிசகாது எடுத்த முயற்சி. காதலை எதிர்க்க எதிர்க்க வளரும் என்பதை அழகாக கட்சிபடுத்தபட்டிருக்கும் விதம். நடன அசைவுகள் பாடல்  கொடுத்த இனிமை  என்று படத்தை பலமுறை  பார்த்து ரசிக்கலாம் என்பதற்கான உத்தரவாதம் கண்டிப்பாக இந்த படதிற்கு  கொடுக்கலாம். 

ஞாயிறு, ஜூலை 15, 2012

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" இறுதிநாள் நிகழ்ச்சி...

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" இறுதிநாள் நிகழ்ச்சி மிகவும் ப்ரம்மிப்பகவும் மிக சுவாரசியமாகவும் இருந்தது. சூர்யா அவரை நாயகனாக பார்த்து பழகிய கண்கள் ஒரு குவிஸ் மாஸ்டராக அமர்ந்து கேள்வி கேட்கும் விதம் இந்த நிகழ்ச்சியை ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக ஆக்கியது. நான் முழுவதுமாக இந்த நிகழ்ச்சியை பார்க்காவிட்டாலும் இறுதிநாள் நிகழ்ச்சி மனதில் ஆழமாய் பதிந்தது. உலகில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் ஆனால் யாருடைய வெற்றியை உலகமே கொண்டாடுகிறதோ அவர்தான் மிகச்சிறந்த தலைவர், வெற்றியாளர் எனலாம். வெற்றி என்பதன் தொடக்கம் தோல்விகள் கொடுத்த அனுபவம் எனலாம். சூர்யா அவரது இயல்பான அந்த அணுகுமுறை பலரை வெற்றிபெற செய்தது எனலாம். இறுதிநாள் சூரியாவின் அந்த அனுபவ பேச்சுக்கள் மனதை தொட்டது. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போல்தான் துவங்குகிறது அந்த வாழ்கையை நாம் எப்படி வழிநடத்தி செல்கிறோம் என்பதில்தான் வாழ்கையின் போக்கே மாறுகிறது. சூரியாவை புகழ்வது மட்டும் என்னுடைய நோக்கமல்ல அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவரும் அவர் தந்தை திரு. சிவகுமார் அவர்களும் தந்த விளக்கம் அவர்களது  அனுபவம் தந்த பாடம்.  
இறுதி நிகழ்ச்சி தனக்கே உரிய முறையில் சூர்யா மக்கள் மனதில் தனது நல்ல குணங்களால் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். எப்போதும் பெரிய திரையில் எப்போதாவது அவர் படங்களை சென்று பார்த்தவர்கள். இப்போது வீடிட்குள்ளே சின்னத்திரையில் தன்னை அழகாக காட்டியதோடு தன் இயல்பான குணத்தையும் காட்டினார். அமீர் கான் உடைய "சத்திய மேவ ஜெயதே" போன்ற நல்ல நிகழ்சிகள் சூர்யா நடத்தும் "அகரம்" நிச்சயம் வரவேற்கபட வேண்டிய நிகழ்வுகள்.
இறுதிநாளன்று சூர்யா மற்றவர்களை பாராட்டிய விதம், அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அவர்களது வாழ்கையில் கிடைத்த சுவாரசியமான அனுபவமாக கண்டிப்பாக இருக்கும். அப்படியொரு சுவாரசியமான அனுபவம் இறுதிநாள் நிகழ்ச்சியை பார்த்த எனக்கும் கிடைத்தது.


 

வியாழன், ஜூலை 12, 2012

அரசியலை விரும்பாத இளவரசி டயானா...


"Diana, Princess of Wales" (1 July 1961 – 31 August 1997) -
டயானா அவர்களை பற்றி எழுதவேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும்போது எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி. ஏன் டயானா  அவர்களை பற்றி எழுதவேண்டும் என்பதுதான். அதற்கு காரணம் தேடும்போது டயானா  என்னும் பெயரை கேட்டவுடன் மனதிற்குள் ஒரு இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு அது அவரது வசிகர புன்னகையா இல்லை அவரது அழகான தோற்றமா என்பது புரியவில்லை. ஒரு அரசியல் வட்டத்திற்குள் வரவிரும்பாத ஒரு இளவரசி. இளவரசர் சார்லசை திருமணம் செய்யும்போது அவர்க்கு தான் இங்கிலாந்த் நாட்டின் இளவரசி என்னும் சந்தோசம், அவர் இளவரசி ஆனபிறகு இருந்ததா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது. ஆசை படுவதட்கும் ஆசைபட்டது கிடைத்தபிறகும் உள்ள உணர்சிகளை மதிப்பிட்டால் அந்த ஆசைபட்டது கிடைக்கவேண்டும் என்கின்ற வேட்கை அதனால் ஏற்படும் உந்துதல் அதை அடைய எடுக்கும் முயற்சி நமக்கு அதன்மீதான ஒரு காதலை உண்டாக்குகின்றது. அதே ஆசை நிறைவேறி நாம் ஆசைப்படுவது நமக்கு சொந்தமானால் மனம் அதை விடுத்தது அடுத்த ஒன்றிற்க்கு ஆசைப்பட மனம் ஆயத்தமாகின்றது. இது யாராலும் தவிர்க்க இயலாத ஒன்று  ஆனால் ஒன்றை நாம் யோசித்தோமா நாம் ஆசைப்பட்டோம் அந்த ஆசைப்பட்டது கிடைத்துவிட்டது அதை முழுமையாக அனுபவித்தோமா? என்று நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா?. இதே நிலைதான் டயானவிட்கும் இருந்திருக்க வேண்டும். அப்படி ஆசைப்பட்ட  அரச வாழ்க்கையின் பளபளப்பு வெளியில் இருந்து பார்க்கும்போது மட்டுமே அழகானவையாக இருக்கும் உள்தொற்றம் மிக மோசமானதாக இருக்கும் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்திருப்பார் டயானா.

அரசகுடும்பத்து மருமகலானாலும் நமக்கு அடுத்த வீட்டு மருமகலானாலும் பிரச்சனை ஒன்றுதான். ஆனால் அடுத்த வீட்டு பிரச்சனை பக்கத்துக்கு வீட்டு காதோடு முடிந்துவிடும். அரசகுடும்பத்து பிரச்சனை நாடு முழுக்க பரவிவிடும் அந்த பரவல்தான் டயானாவின் மரணத்திற்கான காரணம். மற்ற அரசகுடும்பத்து பெண்களிடம் உள்ள ஆணவமும், அகங்காரமும் கொஞ்சம்கூட இல்லாத பெண்ணாக டயானா இருந்தது அவரை தனிமைபடுத்தியது. ஆனால் அந்த வேற்றுமையும், தனிமையும்தான் அவரை மக்கள் மனதில் இடம்கிடைக்க செய்தது.தன்னை எப்போதும் மக்களோடு மக்களாக ஒருங்கினைதுக்கொண்ட டயானா பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்ததோடு நேரடியாக சென்று உதவவும் முன்வந்தார் இதை சற்றும் விரும்பாத அரச குடும்பம் அவரை கட்டுபடுத்த நினைத்ததன் விளைவுதான் சார்லஸ், டயானா அவர்ளது விவாகரத்து.

நாம் எங்காவது வெளியில் சென்றால் நமக்கு தெரிந்தவர்களோ அல்லது நம்மை தெரிந்தவர்களோ பார்த்துவிடக்கூடாது என்று ஒரு சில நேரங்கள் நினைப்பதுண்டு. டயானா போன்ற ஒருவரது வாழ்க்கையானது எப்போதும் ஒரு கண் நம்மை பார்ப்பது என்பதை  தாண்டி எங்கு சென்றாலும் நம்மை துரத்தும் கேமராவிடமிருந்து தப்பித்து எங்குதான் நிம்மதியாக இருக்கமுடியும். டயானா தன்னுடைய இளவரசி பட்டதை விட்டு வெளியே வந்தாலும் உலகம் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னை பிரபலமாக்கிய அதே இளவரசி பட்டம்தான் அவரது உயிரையும் குடித்தது. டயானா அரச வாழ்க்கையின் பகட்டை விரும்பாவிட்டாலும் அதன் ஆதிக்க அலைகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரது மரணம் வெறும் கார் விபத்தாகமட்டும் கருதமுடியாது. மக்கள் மனதில் என்றென்றும்  வாழும் இளவரசி டயானாவின் 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரவிருப்பதால் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்.

சனி, ஜூலை 07, 2012

கடவுளை வெளியே தேடியதின் விளைவு நித்தியானந்தா...


நித்தியானந்த ஒரு சாதாரணமான மனிதர் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என்று விட்டுவிடலாம், ஆனால் நித்தியானந்த ஒரு சாமியார் என்கின்ற போர்வையில் ஆன்மீகத்தை கொலைசெய்து அந்த சடலத்தின் மீது பெரிய தனது சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். ஆன்மீகத்தை காம கண்கொண்டு பார்பதான அத்தனை நாடகங்களும் நமது கடவுள் பக்தியின் மீது வைக்கப்படும் மலர்வளையம். முன்பு விவேகனந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், வள்ளலார் போன்ற பல மகான்கள் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் சொன்ன கருத்துக்களை வாழ்க்கை வழிமுறைகளை கடைபிடித்தோமானால் நமது வாழ்க்கை சிறக்கும். வெற்று மனிதனை உயரத்தில் அமரசெய்துவிட்டு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவதிப்படுவது ஆன்மீகமல்ல அது வெறும் ஆணவம் "பசுதோல் போர்த்திய புலி" என்பதாகும். நித்தியானந்தாவை வளர்த்தது உண்மையில் நாம்தான் என்பதை சற்று புத்தியுள்ளவர்கள் யோசிக்கவேண்டும். கூடபிறந்தவனையே நம்பாத நாம் வெறும் சித்து வேலைகளை செய்து தனது வார்த்தை ஜாலத்தை காட்டி மயக்கிவிட்டால் அவனது காலடியில் கோடிகளை கொட்டுவதோடு, கற்பையும் இலக்க சம்மதிக்கும் கேடுகெட்ட புத்திக்கு பெயர் ஆன்மீகமல்ல. மனஅரிப்பின் துவக்கமே ஆன்மீகம் அது உடலரிப்பிட்கான வேட்கையல்ல. மனமே திரைகடலாய் உடலே அதன் அலையாய் அலைந்து திரிந்து அவனை அடைவதே ஆன்மீகம். அதைவிட்டு ஒரு சாமியார் தன்னை கடவுள் என்பாராம் அதை நம்பி அவரோடு உறவு கொள்வார்களாம் உடனே அவர்களுக்கு மோட்சதிற்கான டிக்கெட் வழங்கப்படுமாம். பலருக்கு தெரிவதே இல்லை அவர் ப்ளாக்கில் விற்கும் அந்த டிக்கெட் நரகத்திற்கான டிக்கெட் என்பது. பார்க்க அமைதியாக இருந்தால் அவர் நல்லவர் அவர் செய்வதெல்லாம் சரி என்று நம்பும் முட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை ஆயிரம் பெரியார் அவதரித்தாலும் வேஸ்டுதான். 

மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. தன்னை கடவுள் என்று எந்த கடவுளும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாது. கடவுள் என்பது வேறு மனிதன் என்பது வேறு. நாம் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தானா ? என்பதே சந்தேகம் எழும்போது அதாவது முதல்கட்டமே முழுமையடையாதபோது கடைசி கட்டத்தை அடைந்துவிட்டதாக தன்னை பிரகடனப்படுதிக்கொண்டவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணராமல் அவர்களை தேடி செல்பவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பது சொல்லியா தெரியவேண்டும். மனதுள் இருக்கும் கடவுளை எங்கு தேடி கண்டுபிடிக்கப்போகிறார்கள், மனம் அலைபாய்ந்தால் மௌனம் பிறக்காது அங்கு அமைதியும் கிடைக்காது. மனம் அமைதியானால் ஞானம் பிறக்கும், கடவுள் தெரிவார் அந்த அமைதியில். ஒருமுறை இறைவன் தனக்கே உரிய ஒரு இடம் தேடி அலைந்தார் அவர் எங்கு சென்றாலும் மனிதர்கள் அவரை தொந்தரவு செய்தார்கள் அவரோ யாரும் தன்னை கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்திற்கு செல்ல நினைத்தார் அதனால் மனிதனின் மனதுள் சென்று அமர்துவிட்டார். எங்கெங்கோ அலைந்த மனிதர்கள் கடவுளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு வழியின்றி தாங்களே தங்கள் கடவுளை உருவமாக்கி தனக்குள் இருக்கும் கடவுளை வெளியில் தேட ஆரம்பித்தார்கள் அந்த தேடுதலின் உச்சகட்டம்தான் தன்னை கடவுள் என்று பிறரை நம்ப வைப்பது பிறகு அவர்களை முழுவதுமாய் ஆக்கிரமித்து அவர்களது சுயத்தை அழித்து தானே கடவுள் என்கின்ற தர்க்கத்தை கொண்டுவருவது.
நித்தியானந்தா மட்டும் தவறு செய்யவில்லை அடிப்படையில் மனித மனதின் மொத்த உருவம் நித்தியானந்த. மனிதர்கள் மற்றவர்கள் தாங்கள் ஆசைபடும் நிலையை நித்தியானந்தா அடைந்துவிட்டார் என்கின்ற பொறாமைதான் பலர் நித்தியானந்தாவை வெறுக்க காரணம்.அது தேவைக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பெண்களிடம் உறவு, மற்றவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து தான் விருப்பதிற்கு அவர்களை ஆடவிடுவது என்கின்ற போதை எல்லோருக்குமே தேவை அதை வெற்றிகரமாக நித்தியானந்த நிறைவேற்றிவிட்டார். அடிப்படையில் ஒன்று யோசிக்க மறந்துவிட்டோம் அது எல்லோரும் நிதியானந்தாவாக ஆகா ஆசைப்படுவது அது நடக்காதபோது அவரை வெறுப்பது என்கின்ற ரீதியில் நடந்தவைதான் என்பதே உண்மை.இதை புரிந்துகொண்டால் தவறு நித்தியானந்தவிடம் மட்டும் இல்லை என்பதும் புரியும்.