சனி, ஜனவரி 21, 2012

பழங்குடியின மக்களை பாதுகாப்பது நமது கடமை...


 
இந்தியாவிற்கு சொந்தமான தீவு சில வருடங்களுக்கு முன்பு சுனாமியால் சுழற்றப்பட்ட தீவு அந்தமான் நிக்கோபார் தீவு.உலகம் எங்கோ நிலவிற்கு குடிப்பெயர முயற்சி செய்துகொண்டிருக்கும்போது இந்த பழங்குடி மக்கள் பலகாலம் வேட்டையாடப்பட்டு மிச்சமுள்ள சொச்ச மக்கள் கொச்சைப்படுத்தப்படுவது சர்ச்சைக்குரிய விசயமாக தெரியவில்லையா?. இன்று அவர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் தங்கள் உணர்வை தொலைத்து உடையின்றி நடனமாடுவது நாகரிகமாக தெரிகிறதா என்ன?. ஆங்கிலேயர்கள் அந்தமானை ஆக்ரமித்தபோது இந்த பழங்குடியினர் அனுபவித்த துன்பம் கொஞ்சமில்லை. ஒரு நாயை சுடுவதை போலே சுட்டுக்கொன்று அதை பெருமையாக கொண்டாடிய வெள்ளையர்கள் அதை வேடிக்கை மட்டும் பார்த்த நம்மை போன்ற இந்தியர்கள், இந்த பாவத்தை எந்த கங்கையில் போய் கழுவப்போகிறோம்? மனிதனின் அடிப்படை தேவைக்காக ஒரு இனம் இனாம் தேடி நிர்வாண நடனமாடுவது, அதை ரசிக்க ஒரு கூட்டம் இங்கிலாந்த் நாட்டில் இருந்து ஓடுவது நியாயம்தான?. அவர்கள் நம்மை போன்ற மனிதர்கள் என்பது அவர்களுக்கு மறந்துபோனதா?

ஒரு கூட்டம் யானைகள், விலங்குகளை காட்டுவதை போல மனிதர்களை காட்டுவது நம்முடைய பலகீனமே தவிர அவர்களை அந்த நிலையிலேயே வைத்திருக்கும் இந்திய அரசின் பலகீனமே தவிர அந்த அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள் பாவம். அறிவும், திறமையும் உள்ளவன் மற்றவரை அடிமையாக்க நினைப்பது மனித இனத்தின் சாபக்கேடு. அப்படிப்பட்ட மனிதர்கள்தான் இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள். உலகின் சித்தாந்தங்களை மறந்து சின்னபுத்தியோடு மாவீரன் என்று சொல்லிக்கொள்கின்றனர். கையில் துப்பாக்கி இருந்தால் யாரையும் கொன்றுகுவிக்கும் அதிகாரம் இருந்தால் அவர்கள் தங்களை வீரர்கள் என்று சொலிக்கொள்ளும் அவலத்தை யூதர்களை லட்சக்கணக்கில் கொன்றுகுவித்த ஹிட்லரை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


பழங்குடியினர் என்பவர்கள் யாரோ அல்ல. உலகத்தின் மாற்றங்களை சந்திக்காதவர்கள். நாம் சந்தித்தவர்கள் அவ்வளவுதான். மற்றபடி பசி, தாகம், காமம், வலி, காதல், உடல் உபாதைகள் எல்லாம் அவர்களுக்கும் நமக்கும் ஒன்றுதான். இன்னொரு விஷயம் யாரும் மறந்து விடக்கூடாத ஒன்று அது "மரணம்". அது எல்லோருக்கும் பொதுவானது. நம் முன்னோர்களும் பழங்குடியினர்தான் என்பதை மறந்துவிட்டு அவர்களை நிர்வாணப்படுத்தி நடனமாடவைத்து, கும்மாளமடித்து நாய்க்கு பிஸ்கட் போடுவது போல அவர்களுக்கும் உணவளித்து, அவர்களை கஷ்டப்படுத்தி, காயபடுத்தி அதில் சந்தோசம் காண நினைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் அல்ல மிருகமும் அல்ல காரணம் எந்த மிருகமும் இதை செய்யாது என்பதால் அவர்கள் தாங்கள் யார் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

பழங்குடியினர் பாவப்பட்ட மக்கள் அவர்களுக்கு நமது ஆதரவு தேவை. நாமும் அவர்களைப்போல் இருந்து வந்தவர்கள்தான் என்ற தெளிவு இருக்கட்டும்.நமது இந்திய அரசு அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கிலாந்து மக்கள் அவர்களை கேலிப்பொருளாக பார்க்காமல் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிட்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும். பசித்தவனுக்கு உணவு கொடுப்பதுதான் நாகரிகம். அவர்களின் உணர்வுகளை கொன்றுவிட்டு உணவை பிச்சையிடுவது நாகரிகமல்ல.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக