காலம் மிக வேகமாக மாறிவிட்டது இப்போதும் என் சிறுவயது நியாபகங்கள் சற்று பின்னோக்கி பார்த்தல் பல விசயங்கள் இழந்தது கண்கூடாக தெரியும். அன்று இருந்த சந்தோசத்தை இப்போது தேடினால் அது கிடைக்காத தூரதிட்கு சென்றுவிட்டது . சிறுவயதில் பார்த்த உறவுகள் மீதான எதிர்பார்ப்பும், பாசமும் மறைந்து இப்போது வெறும் வேஷம் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மையாகிவிட்டது. நான் தொலைத்த அந்த நாட்களை சற்று யோசிக்க, யோசிக்க அடடா தொலைத்து விட்டேனே என் பொக்கிஷ நாட்களை என்று மனம் துடிக்கிறது என் காதிற்கு மட்டுமே கேட்கிறது. கையில் எப்போதும் செல்போன் இருக்கிறது இப்போது, அதில் மணிக்கணக்கில் பேச வாய்ப்பிருந்தும் ஏனோ இப்போது மனசு அன்று விரலை நுழைத்து நம்பரை சுற்றி பலநாள் பிரிந்த உறவுகள் ஒரு வார்த்தை காதார கேட்டுவிட்டால் வரும் சந்தோசம் இன்று பேசும்போது அந்த சந்தோசம் காணாமலே போய்விட்டது.
ஒரு தொலைபேசி வீட்டின் ஒரு அங்கம் போல ஒரு கௌரவம் போல என்ற நிலைமை மாறி ஆளுக்கு ஒரு செல்போன் அவரவர்க்கு ஒரு தனி உலகமாக அது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. கைக்குள் உலகம் வந்துவிட்டது,ஆனால் மனசுக்குள் அமைதி போய்விட்டது. காலம் மிக வேகமாக ஓடுகிறதா? அல்லது நமது வாழ்க்கை செயட்கைக்குள் சிக்கிவிட்டதா? என்பது விடை தேடும் கேள்வியாகவே என் மனதில் படிந்திருக்கிறது.அன்று பண்டிகை என்றால் ஒன்று கூடி மிக சந்தோசமாக கொண்டாடியது இன்று தொலைக்கட்சிக்கு அடகுவைதுவிட்டோமே என்ற கவலை மனதை வாட்டுகிறது. மனதில் ஏற்படும் அந்த சின்னக் சின்ன நியாபகங்கள் சந்தோசத்தை கொடுத்தாலும் அது என்னை விட்டு கிட்டத்தட்ட மறைத்து போய்விட்டது என்று நினைக்கும்போது இப்போது மனசு வருந்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்பது புரிகிறது. ஒரு சின்ன நகைச்சவை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பேருந்தில் நானும் எனது பாட்டியும் பயணம் செய்து கொண்டிருந்தோம், அப்போது எனக்கு வயது எட்டிருக்கும். பேருந்தில் எனக்கு என் பாட்டி அரை டிக்கெட் வாங்கினார். அப்போது நடத்துனர் பையனுக்கு எத்தனை வயது? என்று கேட்டதற்கு ஐந்து வயது என்று பொய் சொன்னார் என் பாட்டி . அதற்கு நான் பாட்டி யாருக்கு பாட்டி ஐந்து வயசு? எனக்கு எட்டச்சு என்றேன். அப்போது அறியா வயசு என் பாட்டி சும்மா இருடா என்று என்னை முறைத்தார். மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் பாட்டி யாருக்கு ஐந்து வயது? என்று, அதற்கு பாட்டி எனக்கு தான் ஐந்து வயசு என்று சொன்னதும் எனக்கு அப்போது புரியவில்லை பாட்டி என்னைவிட சிறியவரா? என்று எனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டேன். பாட்டி ஏன் அப்படி சொன்னார் என்பது கொஞ்ச நாள் கழித்துதான் புரிந்தது. அப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய மக்கு என்று. இப்போது பாட்டியும் உயிரோடு இல்லை எனது வயசும் ஐந்தில்லை.
திண்ணை இப்போது எங்குமே பார்க்க முடியாத ஆகிவிட்டது. அன்று யார் வந்தாலும் அமர்ந்து பேச படுத்து உறங்க என்று இருந்த திண்ணை இன்று இல்லை. பக்கத்து வீட்டுடன் உள்ள தொடர்பு இப்போது காணமல் போய் விட்டது. இப்போது இழந்தவைகள் பல, பெற்றவைகள் சில. அந்த சில விசயங்கள்தான் இன்று பல விசயங்களை மாற்றிவிட்டது. அன்று இனித்த உறவு இன்று கசந்து விட்டது. பணம் என்ற ஒன்று மட்டுமே வெற்றிபெற்றதற்கான அடையாளமாக மாறிவிட்டது. அப்போது வீரதிட்கும், திறமைக்கும் முதலிடம் இப்போது வெறும் பணத்திற்கு மட்டுமே புகலிடம். நான் இழந்தவை இவ்வளவு என்றால் எனக்கு முந்தைய தலைமுறை இழந்தது இன்னும் அதிகம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக