சூர்யா என்கின்ற நடிகரைப்பற்றி கொஞ்சமே தெரிந்திருந்த எனக்கு "இப்படிக்கு சூர்யா" என்கின்ற புத்தகத்தின் மூலம் அறிமுகமானது உண்மையில் சூர்யா அல்ல சரவணன் என்பதை தெரிந்துகொண்டேன்.ஒரு நடிகனைப் தெரிந்துகொள்ள படிக்க ஆரம்பித்த புத்தகம் சரவணன் என்கின்ற நல்ல மனிதனை எனக்கு அறிமுகப்படுத்தியது.எல்லோருக்கும் படத்தின் மூலமாக அறிமுகமாகிய சூர்யா என்கின்ற நடிகனுள் உண்மையில் சரவணன் என்கின்ற மனிதனை இந்த புத்தகத்தில் காணமுடிந்தது.
சூர்யாவிற்கு சிறுவதில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை அவை கடந்துவந்த பாதைகள் மனதை நெகிழச்செய்தது. ஒவ்வரு வார்த்தையும் அனுபமாக வெளிப்படுத்தப்பட்டது. வெறும் புகழ், பணம், வெற்றி என்ற ஒற்றைக்கண் கொண்டே பார்துப்பழகியதாலோ என்னவோ திறமை, விடாமுயற்சி, உழைப்பு பற்றி யோசிக்காமலே இயங்குகிறது எல்லோரது மனமும்.
சூர்யா ஒரு நடிகனின் மகன் என்கின்ற கேடையத்தை பயன்படுத்தாமல் திறமை என்கின்ற கத்தியைக்கொண்டு ஜெயித்த வரலாற்றை புத்தகம் உணர்த்தியது. சிவக்குமார் என்கின்ற ஒரு கேடையம் கவசமானது. அந்த கவசம் தோல்வி என்கின்ற எதிரியின் உறுத்தலில் இருந்து காத்து நின்றது.பணம் என்கின்ற ஒன்று இருந்தால் மட்டுமே வெற்றிக்கு போதாது நல்ல உழைப்பு வேண்டும் என்ற எடுத்துக்காட்டு எவருக்கு புரிந்ததோ அவர்களுக்கு வெற்றி சாத்தியமாகும்.
ஒவ்வரு தோல்விகளின் கயிற்றைபிடித்து வெற்றி என்கின்ற சிகரத்தை அடைந்தவர் நடிகர் சூர்யா. ஒரு ஜென் கதை உண்டு அதில் சிஷ்யன் குருவிடம் குருவே சிகரத்தை அடைய ஆசைப்படுகிறேன் எங்கிருந்து தொடங்குவது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு உச்சியில் இருந்து தொடங்கு என்று பதில் சொன்னார் குரு. உச்சி என்பது இடத்தைக்குரிப்பதல்ல மனதின் ஆழத்தை குறிப்பது. வெற்றியின் சிகரத்தை எல்லோராலும் அடையமுடியும் முயற்சி இருந்தால்.
தம்பியை சிறுவயதில் ஒரு சகபோட்டியாளனாக பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் சிறுவயதில் தவிர்க்க முடியாது அது இயற்கை. காலம் என்கின்ற எஜமான் நம் தவறுக்கு கொடுக்கும் சவுக்கடிதான்
நம்மை எது சரி? எது தவறு? என்று யோசிக்கவைக்கும். காலம்தான் கடவுள், காலம்தான் நித்தியமானது, காலம்தான் மனிதனை மனிதனாக மாற்றுவது, காலம்தான் பலவற்றை மறக்கச்செய்கிறது. அந்த காலம் வரும்போது நல்லவன் தீயவனாகிறான், தீயவன் நல்லவனாகிறான். நண்பன் எதிரியாகிறான், எதிரி நண்பனாகிறான் அப்படிபட்ட காலம் வந்தபொழுது சூர்யா ஒரு சிறந்த அண்ணன் என்பதை நிரூபித்தார்.
உலகம் மிக விசித்திரமானது ஒருவன் தொடர்ந்து தோல்வியை சந்தித்தால் உலகம் அவனை சீக்கிரம்
மறந்துவிடுகிறது. அதே மனிதன் தொடர்ந்து வெற்றிபெற்றால் அதே உலகம் அவன் செய்த தவறையும் சேர்த்து கொண்டாடுகிறது. வெற்றிதான் மனிதனை மேலும் மேலும் உழைக்க செய்கிறது. அதே வெற்றிதான் கர்வத்தையும், ஆணவத்தையும் ஒரு மனிதனுக்குள் வளர்த்துவிடுகிறது. யார் அந்த செருக்கில் மாட்டுவதில்லையோ அவர்களை காலமும் மறப்பதில்லை, உலகமும் மறப்பதில்லை.
வெயில் அதிகம் என்று நினைத்து நிழல் தேடி ஓட நினைக்கும்போது நிழல் தானாய்
தேடிவந்து இளநீர் தந்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது சூர்யா, ஜோதிகா காதல். ஒரு மனிதன் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நாம் தேடாமலேயே வந்து சேர்வது அதிஷ்டம் அல்ல அது அதனுடைய இஷ்டம் நமக்கு வரவேண்டும் என்று இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு அரசன் முன்னேற நல்ல அமைச்சர் தேவை. ஒரு மாணவன் முன்னேற நல்ல ஆசிரியர் தேவை.ஒரு நல்ல விவசாயம் பெற நல்ல மண்வளம்
தேவை. ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற நல்ல மனைவி தேவை.
ஒருவரது குடும்பம் நன்றாக அமைந்துவிட்டால் அவரது வெற்றி பாதி உறுதி செய்யப்படுகிறது. மீதி பாதி வெற்றியை யார் தேடி அடைகிறார்களோ அவர்கள் சிகரத்தை அடைகிறார்கள்.
சூர்யா நடித்ததில் பிடித்தது என்று பல படங்கள் இருந்தாலும் சூரியாவைப்பற்றி படித்ததில் பிடித்தது இந்த " இப்படிக்கு சூர்யா " புத்தகம்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக