வியாழன், செப்டம்பர் 01, 2011

பள்ளிக்கூடம்...

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!...
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே ஏன்? ஏன்? நண்பனே!..." என்ற கண்ணதாசனின் இன்ப வரிகள் பள்ளி சென்ற நாட்களை சற்று பின்னோக்கி செல்ல வைத்தது.  பள்ளிநாட்கள் யாராலும் மறக்கமுடியாத அவரவர்  மனதில் ஆழமாய்  பதிந்துவிட்ட ஒரு நினைவுச் சின்னம்.  அன்றிருந்த மகிழ்ச்சி, நாளை பற்றிய சிந்தனையற்ற கண்ணாமூச்சி கனவுகள், பொறாமையற்ற, கவலையற்ற அந்த பசுமை நினைவுகள் பலகாலம் நம்முடைய   பழங்காலத்தை பேசும் அந்த நினைவுகளை  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒவ்வரு வினாடியும் நம்மை விட்டு மிக இயல்பாய் ஒரு பட்டாம்பூச்சி பறப்பது போன்று நமது
கண்ணுக்கு தெரியாமலேய மறைந்து போய் விட்டது . ஆண், பெண் என்ற பேதமில்லாமல் விளையாடி, சண்டைபோட்டு பரிட்சைக்கு  பயந்து என இவற்றை நினைத்து பார்க்க சந்தோசமாகவும் அதே நேரம் நாம் செய்த தவறுகளை
நினைத்தால் சிரிக்கவும் தோன்றும்போது மனசு லேசாக வானத்தை வட்டமிடுகின்ற ஒரு உள்ளுணர்வு.


விடுமுறைக்காக ஏங்கிய காலம், முழு ஆண்டு  பரிட்சை முடிந்ததும் நண்பர்கள் சட்டையில் மையிட்டு விளையாடியது, அதற்கு சண்டைபோட்டு அடுத்த வகுப்பில் சமாதனமாகியது. இதை நினைக்கையில் கனவு வாழ்க்கையாக தோன்றும்  அந்த கால நினைவுகள் உண்மையில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நெஞ்சம் சில விசயங்களை மறப்பதில்லை. ஒரு அறைக்குள் எத்தனை பட்டாம்பூச்சிகள் எங்கோ அவரவர்  வாழ்கையை தேடி 
ஓடுகையில்  ஒரு நிமிடம் அவர்கள் படித்த பள்ளியை பற்றியோ, நண்பர்களை பற்றியோ, பாடம் எடுத்த வகுப்பாசிரியர்கள் பற்றி நினைக்கும்போது மனதிற்கு ஒரு இயல்பான சந்தோசம் வரும். 

பள்ளிக்கூடம் நமக்கு வெறும் பாடத்தை மட்டும்  கற்றுத்தரவில்லை பக்குவத்தை,பகுத்தறிவை, நட்பை, நாகரிகத்தை நமக்கு கற்றுத்தருகிறது. ஒரு சிறந்த கல்வி அறியாமை இருளை விரட்டும் ஒளியாக இருக்கும்போது அது நமக்கு சரியான பாதையை காட்டுகிறது. பள்ளியில் நாம் என்ன கற்கிறோமோ அதுவே நம்முடைய வாழ்கையின் இறுதிவரை வருகிறது. கல்வி என்பது வெறும் மனப்மாடம்  செய்து ஒப்பித்தல் அல்ல அறியாமை என்னும் சடலத்தில் இருந்து அறிவு என்கின்ற மறுபிறவி எடுப்பது. ஒரு தீக்குச்சி உறசப்படவேண்டும், ஒரு வைரம் தீட்டப்படவேண்டும், ஒரு   தங்கம் மெருகேற்றப்படவேண்டும் அதுபோல் கல்வி நம்மை நயப்படுத்தப்படவேண்டும். அப்படிப்பட்ட கல்வி நம்மை தலை நிமிர்ந்து வாழவைக்கும். அத்தகைய  கல்வியை,நண்பர்களை, வகுப்பாசிரியர்களை, பள்ளிக்கூடத்தை நினைக்கும் போது  ஒரு கவிதை  படித்த உணர்வு நமக்குள் ஏற்படுத்துகிறது .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக